வியட்நாமின் ஹா லாங் கடலில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை சுற்றிப் பார்க்கச் சென்றபோது திடீரென பெய்த கனமழை காரணமாக 48 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ஜூலை 19 ஆம் தேதி மதியம், 53 பேரை ஏற்றிச் சென்ற வொண்டர் சீ சுற்றுலாப் படகு கவிழ்ந்தது. வியட்நாமிய எல்லைக் காவல்படையினரும் கடற்படையினரும் 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர், மேலும் 28 உடல்களை மீட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் தலைநகர் ஹனோயிலிருந்து வந்ததாகவும் அந்தப் படகில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாகவும் தெரிகிறது.
இருப்பினும், இதில் எத்தனை வெளிநாட்டுப் பயணிகள் இருந்தனர் என்பது குறித்தும் இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஹா லாங் விரிகுடா வியட்நாமின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், அதன் நீல-பச்சை நீர்நிலைகள் மற்றும் மழைக்காடுகள் நிறைந்த சுண்ணாம்புக் கடல் தீவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
கடந்த ஆண்டு, யாகி புயலால் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் அலைகளால் தாக்கப்பட்டதால், ஹா லாங் விரிகுடாவில் உள்ள கடலோர குவாங் நின் மாகாணத்தில் 30 கப்பல்கள் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.