சென்னை:
சென்னை மெட்ரோவிற்கு புதிதாக ஆறு பெட்டிகள் உடைய 28 புதிய மெட்ரோ ரயில்களை வாங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் சுமார் இரண்டரை லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக சிஎம்ஆர்எல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2,821 கோடி ரூபாய் செலவில் மெட்ரோவில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போது, நாளொன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 82.53 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளது. இது ஒரு மாதத்தில் பதிவான அதிக பயணிகள் வருகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் கூடுதல் வருகைக்கு ஏற்ப கூட்ட நெரிசலும் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிதாக மெட்ரோ ரயில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.

புதிதாக ஆறு பெட்டிகள் உடைய 28 புதிய மெட்ரோ ரயில்களை வாங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான நிதியை சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்று ரயில்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சிஎம்ஆர்எல் அனுப்பிய கருத்துருவுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.