உலகின் 7 கண்டங்களையும் ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தற்போது புதிய வடிவில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா, இத்தாலி உள்பட பல நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகள் சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக மீண்டும் நிறுத்தி உள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நவம்பர் 25ந்தேதி முதல் டிசம்பர் 23ந்தேதி வரை லண்டனிலிருந்து சென்னை வந்த 2,724 பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஒரே ஒரு நபருக்கு மட்டுசூம கொரோனா அறிகுறி தென்பட்டது. அவர் சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்டியூட் மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களில் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வரும் 28-ம் தேதிதான் கிடைக்கும் எனத் தெரிகிறது. ஆனால், விரைந்து அனுப்பிவைக்க தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பரவி வரும் வைரஸ் குறித்து மரபணு ஆய்வு செய்ய வேண்டியதிருப்பதால், ஆய்வுமுறையும் சிக்கலானது, வழக்கமான பரிசோதனை போன்று இருக்காது, இதற்கு அதிகமான காலநேரம் ஆகும். இது தொடர்பாக வைரலாஜி நிறுவனத்துடன் பேசி வருகிறோம் என்றவர், பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு ஆன்டி-வைரல்மருந்துகள், ஆன்டி பயோடிக்ஸ் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
இந்த ஆய்வின் முடிவுகள் மூலம் அந்தப் பயணியின் உடலில் இருக்கும் கரோனா வைரஸின் மரபணு மாதிரியும், லண்டனில் தற்போது இருக்கும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் மாதிரியும் ஒன்றானதா, அல்லது வேறுபட்டதா என அறிய முடியும்.
பிரிட்டனில் இருந்து இன்று வந்த சரக்கு விமானத்தில் பயணித்த 9 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது. இதையடுத்து, அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த சரக்கு விமானம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பட்டுள்ளது. யாரையும் சரக்குகளை இறக்க அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள், கண்காணிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.