டில்லி
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் இதை உறுதி செய்து மத்திய அரசு, அரசாணையை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 7-ம் தேதி தற்போதைய இட ஒதுக்கீட்டு நடைமுறைகளின்படி 2021-22-ம் ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. நேற்று இவ்வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நேற்று நீதிபதிகள்,
“அகில இந்திய ஒதுக்கீட்டில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதஇடஒதுக்கீடு செல்லும். இது தகுதிக்கு முரணானது கிடையாது. ஒருவர் தகுதியைப் போட்டித் தேர்வுகளை மட்டுமே கணக்கில் வைத்து மதிப்பிட முடியாது. தேர்வின்மூலம் தனிநபரின் சிறப்புத்தன்மை, தகுதி, குணம் ஆகியவற்றைக் கண்டறிய முடியாது.
மேலும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான வருமான வரம்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இது குறித்து பாண்டே கமிஷனின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு. இந்த விவகாரம் தொடர்பாக மார்ச் இறுதியில் விசாரணை நடத்தப்படும்.”
எனத் தீர்ப்பு அளித்துள்ளனர்.
[youtube-feed feed=1]