சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அதிகபட்சமாக மணலி பகுதியில் 27 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வளிமண்ட மேலடுக்கு சுழற்றி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பேய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஆகஸ்டு 29ந்தேதி அறிவித்திருந்தது. மேலும், பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக வடசென்னையில் மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் பெரம்பூர், மாதவம், மணலி, கொரட்டூர், கோயம்பேடு, ரெட்ஹில்ஸ் வடபழனி, கத்தியவாக்கம், திருவொற்றியூர் , விம்கோ நகர், எழும்பூர், அண்ணா நகர், அம்பத்தூர், ராயபுரம், கிண்டி மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டியது. மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் மழை மற்றும் சாலைகளில் தேங்கிய தண்ணீர் காரணமாக வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு சாலையோரம் உள்ள நிழற்குடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் காலியாக பகுதிகளில் ஒதுங்கினர். வடசென்னை வியாசர்பாடி பகுதிகளில் உள்ள குடிசைப்பகுதிகள் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கின்றன. கனமழை காரணமாக சென்னைக்கு காய்கறிகள் எடுத்து வந்த கனரக வாகனங்களும் மழைநீரில் தத்தளித்து சென்றன.
இரவு 10.30 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் பெய்யத்தொடங்கிய மழை, சுமார் 2மணி வரை நேரம் கொட்டி தீர்த்தது. மேலும் தொடர்ந்து, அதிகாலை வரை விட்டு விட்டு பெய்தது.
அதிகபட்சமாக மணலியில் 27.செமீ, கொரட்டூர் 18செ.மீ, கத்தியவாக்கம் 14செ.மீ, திருவொற்றியூரில் 13செ.மீ, விம்கோ நகரில் 26செ.மீ பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களின் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோவை மாவட்டம், வால்பாறை, சின்கோனா, சின்னக்கல்லார் பகுதியில், தலா 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் பலத்த தரைக்காற்று வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று அதிகபட்ச வெப்பநிலை, ஒருசில இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல் சி யஸ் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.