இந்திய இளைஞர்களை சர்வதேச எல்லைகள் வழியாக சட்டவிரோதமாக கடத்தியதற்காகவும், போலி கால் சென்டர்கள் மூலம் பண மோசடி செய்ததற்காகவும் தேசிய புலனாய்வு முகமை என்ஐஏவால் தேடப்படும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவரை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

குற்றவாளியை பிடிக்க பல மாதங்களாக பல மாநிலங்கள் வழியாக அவரை துரத்திச் சென்ற காவல் துறையினர் 2500 கி.மீ. இடைவிடாத தேடலுக்கு பின் ஹைதராபாத்தில் அவனை கைது செய்தது.

கம்ரான் ஹைதர்

காவல்துறையினர் தன்னை நெருங்குவதை தெரிந்து இடத்தை மாற்றிக்கொண்டே இருந்த அந்த நபர் ஹைதராபாத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல முயற்சி செய்த நிலையில் அவன் பிடிபட்டான்.

கடந்த மே 27 அன்று டெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனி காவல்நிலையத்தில் நரேஷ் லகாவத் என்ற நபர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையில் கம்ரான் ஹைதர் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தாய்லாந்து மற்றும் லாவோஸுக்கு அனுப்பப்பட்ட நரேஷ் லகாவத் இறுதியாக தாய்லாந்து அனுப்பப்பட்ட நிலையில் அவரது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டது, மேலும் ஆன்லைனில் இந்தியர்களை ஏமாற்றும் சீன நிறுவனத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இவர்கள் பிடியில் இருந்து தப்பிய நரேஷ் லகாவத் டெல்லி காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்ததை அடுத்து கம்ரான் ஹைதரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

கம்ரான் ஹைதர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 2 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கம்ரான் ஹைதர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த ஆள் கடத்தல் மற்றும் மோசடி கால் சென்டர்கள் மூலம் ஆன்லைன் பண மோசடி குறித்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.