வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள முகாமில் மியான்மரில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர்.

குடிசை வீடுகள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில், திடீரென ஒரு வீட்டில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ மளமளவென மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் பல அடி உயரத்திற்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

இந்த விபத்தில், 2500 க்கும் அதிகமான கூடாரங்கள் சேதமடைந்த‌தாகவும் இதனால் பெருமளவிலான பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தால் ஏராளமானோர் தங்குவதற்கு இடமின்றி திறந்தவெளியில் தங்கியுள்ளனர்.