ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் 25 சதவீத தொழில் நிறுவனங்கள் மூடல்

Must read

2017 ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து குஜராத்தில் மட்டும் இதுவரை சுமார் 2.75 லட்சம் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த புள்ளிவிவரத்தில், 11.1 லட்சம் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. யில் பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் 2.75 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டதாக ஜி.எஸ்.டி. தெரிவித்துள்ளது. இது வரி செலுத்துவோரில் சுமார் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1.24 லட்சம் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.யில் இருந்து வெளியேறியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள், “தொழில் வளர்ச்சி அடையும் என்று ஆர்வமிகுதியால் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அனைத்து சட்டரீதியான உரிமங்களையும் பதிவு செய்து விட்டு பின்னர் தொழில் முடக்கம் காரணமாக வெளியேறியவர்கள் அதிகம்” என்று பொத்தாம்பொதுவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேட்டியளித்த குஜராத் வர்த்தகம் மற்றும் தொழில் துறை துணை தலைவர் பதிக் பட்வாரி “ஜி.எஸ்.டி. வரிக்கொள்கை ஒவ்வொரு மாதமும் வரி செலுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கலுடன் அமல்படுத்தப்பட்டிருப்பது முக்கிய காரணம்” என்று கூறினார்.

மேலும், “சிறுமுதலீட்டில் தொழில் துவங்கியவர்கள் தங்களுக்கு வரவேண்டிய நிலுவைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் சிக்கலான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது”

“இதனால் பெருநிறுவனங்களுடன் தங்களை இணைத்து கொள்வதிலும் தங்கள் துணை நிறுவனங்களை ஒன்றிணைத்தும் தொழில்களை மூடின, இதன் காரணமாக தனித்தனி ஜி.எஸ்.டி. செலுத்தும் நடைமுறையால் ஏற்பட்ட பெரும் செலவினங்களை தவிர்த்தனர்.” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக கொரோனா ஊரடங்குக்குப் பின் உணவகங்கள், சுற்றுலா, சிறு வணிகர்கள், ஜவுளி, சில்லறை வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதிகள் பெருமளவு மூடப்பட்டதே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

2018-19 ம் ஆண்டு 30,732 வணிக நிறுவனங்கள் தொழில் முடக்கம் காரணமாக ஜி.எஸ்.டி.யில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த நிலையில், 2020-21 ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 63,213 ஆக அதிகரித்துள்ளது.

2018-19 ல் 1.6 லட்சம் புதிய நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. பதிவு செய்த நிலையில் 2020-21 ல் அது 1.39 லட்சமாக குறைந்துள்ளது.

குஜராத்தில் கடந்த மூன்றாண்டுகளில் தொழில் முடக்கம் காரணமாக மூடப்பட்ட நிறுவனங்களின் எண்னிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் தொழில்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

More articles

Latest article