சென்னை:

த்தியஅரசின் தொழிலாளர் விரோத போக்கினை எதிர்த்து நாடு முழுவதும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் சுமார் 25 லட்சம் பேர் பங்குகொண்டதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக சுமார்  ரூ.21,600 கோடி மதிப்பிலான காசோலை தேக்கம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, இன்று நாடு முழுவதும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை பங்குகளை விற்கக்கூடாது, வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும். இன்சூரன்சு நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தக் கூடாது, இன்சூரன்சு பிரீமியம் மீதான ஜி.எஸ்.டி. வரியை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் முழுமையாக நடைபெற்றுள்ள நிலையில், தமிழகம் போன்ற சில மாநிலங்களில் போராட்டத்திற்கு எதிர்பார்த்த அளவுக்குஆதரவு இல்லை என்றாலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

வங்கி ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,  மக்களை கடுமையாக பாதிக்கின்ற விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மக்கள் நலத்திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளித்தரும் எல்.ஐ.சி. பொது இன்சூரன்சு, பொதுத்துறை வங்கிகள், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்களை பொதுத்துறையிலேயே பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விற்பனையை அரசு கைவிட வேண்டும், இன்சூரன்சு, வங்கி உள்ளிட்ட துறைகளில் தனியார், அந்நிய ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடனை திரும்பப்பெற வேண்டும். வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இன்றைய போராட்டம் குறித்து கூறியுள்ள வங்கி ஊழியர் சம்மேளனம், இன்றைய போராட்டத்தில் 25லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர் என்றும், இதனால் வங்கி சேவை முழுவதும் பாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. மேலும், ரூ.21,600 கோடி மதிப்பிலான காசோலை பண பரிவர்த்தனையும் முடங்கி உள்ளது என்றும் கூறி உள்ளது.