புதுடெல்லி: வாகன அகற்றுதல்(vehicle scrapping) சான்றிதழுடன் வாங்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும், வாகன வரியில் 25% வரை தள்ளுபடி அளிக்கப்படுவதற்கான ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது இந்த வரைவு அறிவிப்பு.
இதன்படி, ‘வாகன அகற்றுதல்’ சான்றிதழுடன் வாங்கப்படும் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திற்கும், வாகன வரியிலிருந்து 25% தள்ளுபடி அளிக்கப்படுவதற்கு அதில் முன்மொழியப்பட்டுள்ளது. அதேசமயம், வணிக வாகனங்களுக்கு 15% மட்டுமே அந்த வரியில் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரி தள்ளுபடி சலுகையானது, வணிக வாகனங்களுக்கு 8 ஆண்டுகள் வரையிலும், தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் வரையிலும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், இதுதொடர்பாக 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.