சென்னை: சென்னையில் 1600 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்று  50ஆயிரம் இடங்களில்  24-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும்  4வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் விரைந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று 24வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் காலை 8மணி முதல் நடைபெற்று வருகிறது.  இந்த முகாமில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு, 2ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், மேலும், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்டுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 9 மாதங்கள் / 39 வாரம் கடந்தவர்கள் இந்த தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசி (Precaution Dose) செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுமக்களுக்கு எந்தவித சிரமமின்றி எளிதில் அணுக கூடிய அளவிலும், மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயும் இந்த கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.