சென்னை:

மிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  2லட்சத்துக்கு 47ஆயிரத்து 629 மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சமர்ப்பித்த ஆவண புத்தகத்தில் இந்த அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல தொடங்க மாநில அரசுஅனுமதி வழங்கியுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையின்றி மூடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை சரிவடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி,  கடந்த ஆண்டில் அரசு பள்ளிகளில் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் 44 லட்சத்து 13 ஆயிரத்து 336 பேர் மட்டுமே சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பாண்டில், சுமார் 2,47,629 மாணவர்கள் குறைவாக சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை 23 லட்சத்து 99 ஆயிரத்து 17 இல் இருந்து  22 லட்சத்து 31 ஆயிரத்து 88 ஆக குறைந்துள்ளது.

அதே வேளையில், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை  52 லட்சத்து 71 ஆயிரத்து 543 இல் இருந்து, 64 லட்சத்து 81 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது.

மாணவர்கள் சேர்க்கையின்றி அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதற்கு அரசுதான் காரணம் என்று கல்வியாளர்கள்  குற்றம் சாட்டி வருகின்றனர். அடிப்படை வசதி, திறமையான ஆசிரியர்கள் இல்லாத காரணங்களால் பொதுமக்கள், தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல், தனியார் பள்ளிகளை நாடும் மோகம் அதிகரித்து வருகிறது.

ஆனால், மாநில அரசும் கல்வித்துறை அதிகாரிகளும்,  அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள அரசின் புள்ளி விவரம் தொடர்பான  ஆவணங்கள், அரசு மற்றும் கல்வி அமைச்சர்  பொய் சொல்லி வருவதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.