கிட்னி மோசடி கும்பலை பிடிக்க உதவிய எம்பிஏ மாணவர்!! டெல்லியில் அதிர்ச்சி

Must read

டெல்லி:

கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கிட்னி மோசடி நடந்திருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 4 புரோக்கர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி ஆசாமிகள் 40 நாட்கள் பின் தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர் பிரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி கும்பலை பிடிக்க புனே சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ பயிலும் 24 வயது மாணவர் ஜெய்தீப் சர்மா தனது உயிரையும், வாழ்க்கையையும் பணையம் வைத்து உதவி செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் விபரம்…

கடந்த செப்டம்பரில் சர்மாவின் நண்பர் ஒருவர் திடீரென மாயமாகிவிட்டார். சில நாட்கள் கழித்து திரும்பி வந்த அந்த நண்பர் சொற்ப விலைக்கு தனது கிட்னியை விற்றதாக தெரிவித்துள்ளார். இந்த கிட்னி மோசடி கும்பலை பிடிக்க சர்மா திட்டமிட்டார்.

கிட்னி தானம் செய்ய விரும்புவதை போல் அந்த மோசடி ஆசாமிகளை தொடர்ந்து கொண்டார்.
ரூ. 4 லட்சம் வரை கொடுக்க அந்த கும்பல் ஒப்புக்கொண்டது. இந்த தகவலை சர்மா நியூஸ் 24 சேனலுக்கு தெரியபடுத்தினார். அவர்கள் இதை நேரடி ஆபரேஷனாக செய்ய முடிவு செய்தனர். இந்த தகவலை டிவி நிறுவனத்தில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்தனர்.

பின்னர் சில வாரங்கள் மோசடி கும்பலுடன் சர்மா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் போதுமான ஆதாரங்களை போலீசார் திரட்டினர். அதோடு அந்த மோசடி கும்பலும் சர்மா ஆந்திராவை சேர்ந்தவர் என்பது போன்ற போலி ஆவணங்களையும் தயார் செய்துவிட்டது. ரத்த தொடர்பு உள்ளவர் தான் கிட்னி தானம் செய்ய முடியும் என்பதால் இந்த போலி ஆவணங்களை தயார் செய்தனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு பத்ரா மருத்துவமனையில் சர்மாவுக்கு ஆபரேஷன் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. ஆபரேஷன் தியேட்டரில் தயாராக இருந்த சர்மாவை போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து மீட்டனர்.

இது குறித்து இணை கமிஷனர் ரஞ்சன் கூறுகையில்,‘‘ நியூஸ் 24 சேனல் இந்த தகவலை எங்களுக்கு தெரிவித்தனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக 200 மணி நேர வீடியோ பதிவு எங்களிடம் உள்ளது. மருத்துவமனையின் உள்ளே இருப்பவர்கள் உதவி இல்லாமல் இதை செய்ய முடியாது. இது தொடர்பான விசாரணைக்கு சில டாக்டர்களையும், ஊழியர்களையும் அழைத்துள்ளோம்’’ என்றார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ இந்த கிட்னி மோசடி கும்பல் நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. கிட்னி தானம்செய்பவர்களிடம் சொற்ப விலைக்கு வாங்கி அதை ரூ. 30 முதல் ரூ. 40 லட்சம் வரை நோயாளிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்து குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது புரோக்கர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் தொடர்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் நகரில் உள்ள நோய் கண்டறியும் மையத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவித்தனர்.

இது குறித்து பத்ரா மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில்,‘‘ அனைத்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சைகளும் வெளிப்படையாக தான் மேற்கொள்ளப்படுகிறது. விதிகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. அனைத்து வகையான கிட்னி அறுவை சிகிச்சைகள் குழு மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு, ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டு குழுவினரால் பதிவு செய்யப்படுகிறது.

அதனால் இந்த சம்பவத்தில் மருத்துவமனை தரப்பில் தவறு நடக்க வாய்ப்புகள் இல்லை. போலீசாரின் விசாரணைக்கும், குற்றவாளிகளை பிடிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article