கொல்கத்தா
மேற்கு வங்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 24 பேர் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தாவலாம் எனக் கூறப்படுகிறது.
மேற்கு வங்க தேர்தலின் போது திருணாமுல் காங்கிரஸை சேர்ந்த பலர் பாஜகவுக்குத் தாவினர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்னும் ஊகத்தில் பலரும் தாவினர். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தது. ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. திருணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வர் ஆனார்.
இதையொட்டி ஒவ்வொருவராக மீண்டும் திருணாமுல் காங்கிரஸுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவில் 5 வருடங்களுக்கு மேல் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மீண்டும் திருணாமுல் திரும்பி உள்ளார். மேலும் பலர் கட்சிக்கு திரும்பி வர விரும்பிய போதிலும் கட்சி தாவல் சட்டம் காரணமாகப் பயந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று தேர்தலுக்கு முன்பு பாஜக தாவிய சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீஷ் தன்கரை சந்தித்தனர். அப்போது மொத்தம் உள்ள 74 பேரில் 24 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்கள் பங்கேற்கவில்லை. இது பாஜக தலைமைக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் 24 பேரும் திருணாமுல் காங்கிரஸுக்குச் செல்லலாம் என்னும் தகவல் வெளியாகி உள்ளது.