சென்னை:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகள் தவறு என்று நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல் தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்றது. இதில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.
தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட பல கேள்விகள் தவறு என்று சுட்டிக்காட்டி, தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறாக இருந்ததாக ஒப்புதல் அளித்தார். மேலும் இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என முறையிட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் ஒன் தேர்வில், குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறினார். இந்த மனு தொடர்பாக, ஜூன் 17ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி க்கு நீதிபதி உத்தரவிட்டார்.