சென்னை:
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் குறித்து, 24 மணி நேரமும் பறக்கும் படை கண்காணிக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் இந்தமுறைதான் முதன்முறையாக பறக்கும்படை கண்காணிப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளர் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளா்கள் இறுதிப் போட்டியில் உள்ளனா். இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளத் தேர்தல் பறக்கும் படையை மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும், பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அங்கு மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டு அல்லது மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு 3 பறக்கும்படை வீதம் முதன்மை பொறுப்பு அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அக்குழு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரையில் 24 மணி நேரமும் பறக்கும் படை கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பதட்டம் மற்றும் பிரச்சினைகளுக்குரிய வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு வழங்கவும், இங்கு நடைபெறும் வாக்குப்பதிவை வீடியோ ஒளிப்பதிவு செய்து கண்காணிக்கவும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.