மதுரை: தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் இன்று முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை இன்று (டிச.20) முதல் தொடங்குகிறது. முதற்கட்டமாக இரவு 10.45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படும் என விமானத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது மேலும் உதான்  திட்டத்தின்படி சேலத்திலும் விமான சேவை நடைபெற்று வருகிறது. மேலும் பல நகரங்களில் விமான சேவை தொடங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,   மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக ஆக்க வேண்டும் என  பல ஆண்டுகளாக  கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை விமானநிலையத்தில்,  24 மணி நேர விமான சேவை இல்லாததால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் திருவனந்தபுரம், சென்னை ஆகிய விமான நிலையங்களை பயன்படுத்தும் சூழல் இருந்து வந்தது. இது குறித்து நாடாளுன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது, மதுரை விமான நிலையம்  24 மணி நேரம் செயல்படும் விமான நிலையமாக மாற்றப்பட்டு உள்ளது. ஏற்கனவே  கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையம் அறிவித்திருந்த நிலையில் அதன் முதல் கட்டமாக  இன்றுமுதல் (டிசம்பர் 20ஆம் தேதி ) மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு கடைசி இண்டிகோ விமானம் சென்னை புறப்படும் என அறிவிப்பு வந்துள்ளது.

மதுரை விமான நிலையத்துக்கு ஏற்கனவே சென்னையில் இருந்து 8:45 மணிக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து 9 மணிக்கு கடைசி விமானம் சென்று வந்தது. தற்போது 24 மணி நேர சேவை அறிவித்த பிறகு முதல் விமானமாக சென்னையிலிருந்து 9:25 மணிக்கு புறப்பட்டு இரவு 10:20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்து. பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10:45க்கு மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12:05 மணிக்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதை  விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.