இந்தியாவில் இருந்து 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வாங்கியதில் 2375 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அதிபர் போல்சனாரோ தலைமையிலான அரசு பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது.

பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்காக பிரேசில் அரசு ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த மேடிசன் பையோடெக் என்ற நிறுவனத்தை இடைத்தரகு நிறுவனம் போல் புனையப்பட்டு 350 கோடி ரூபாய் பணம் கைமாறியிருப்பது தெரியவந்திருக்கிறது.

மேடிசன் பையோடெக் நிறுவனம் மோசடி நிறுவனம் என்று ஏற்கனவே பல்வேறு புலணாய்வு அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் அரசு பாரத் பையோடெக் நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் செய்த நிலையில், பணம் எப்படி ஒரு மோசடி நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், பிரேசில் அதிபருக்கு இது மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது குறித்த முழுமையான விசாரணை தொடங்கும்போது தான், இந்த முறைகேட்டில் இந்தியாவின் பங்கு என்ன என்பது குறித்து தெரியவரும் என்று தி வயர் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்துள்ளது.