புதுடெல்லி: மே 30ம் தேதியன்று பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மொத்தம் 23 பேர் புதுமுகங்கள். அவர்களில், கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் வந்திருக்கும் மோடியின் வலதுகரம் அமித்ஷா மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
மேலும், இணையமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் கிரிராஜ் சிங் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் கஜேந்திர சிங் ஷெகாவத், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்டின் மகன் வைபவை, ஜோத்பூர் தொகுதியில் சுமார் 2.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், பாரதீய ஜனதா போராடி 18 இடங்களை வென்ற மேற்குவங்க மாநிலத்திற்கு தேவையான பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அப்னா தல் ஆகிய இரண்டு கூட்டணி கட்சிகளும் இடம்பெறவில்லை.
கடந்தமுறை இருந்த அமைச்சரவையைவிட, இந்த அமைச்சரவை அளவில் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தனிப்பொறுப்பில்லாத இணையமைச்சர்களின் எண்ணிக்கை 30% அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை 71 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அமைச்சரவை, இந்தமுறை 58 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.