டெல்லி: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டி இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட, 23 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே ஜி எஸ் டி வரி வசூல் குறைந்த நிலையில், மீண்டும் 1லட்சம் கோடியை தாண்டி வசூலானது. இடையில், கொரோனா 2வது அலையின் தீவிரமான தாக்கத்தின்போது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 2021 ஜூன் மாதம் மட்டும் ரூ.92,849 கோடி வசூல் ஆனது. ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி வசூலாகி வந்தது.
கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.16 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 கோடியாக குறைந்தது. தற்போது, செப்டம்பர் மாத வசூல் 1 லட்சத்து 17 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டின் செப்டம்பர் மாத வசூலை விட வி 23% அதிகம் என கூறியுள்ளது.
மொத்த வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 20 ஆயிரத்து 578 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 26 ஆயிரத்து 757 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 60 ஆயிரத்து 911 கோடி ரூபாயும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.