சென்னை
டெல்லியில் நிலவி வரும் மோசமான வானிலையால் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
தற்போது டெல்லியில் நிலவி வரும் மோசமான வானிலையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதாவதுடெல்லியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா விமானம், சென்னையில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் ஆகிய 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் அந்தமான், டெல்லி, மும்பை, கொச்சி, பாட்னா ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய உள்நாட்டு விமானம் மற்றும் சர்வதேச விமானங்களான ஹாங்காங், பிராங்க்பார்ட், மொரீசியஸ், பாங்காக் உள்பட 12 புறப்பாடு விமானங்கள், சிங்கப்பூர், டெல்லி, மொரீசியஸ் மற்றும் கோவை உள்ளிட்ட 9 வருகை விமானங்கள் என 21 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இவற்றில் சில விமானங்கள் 3 மணிநேரம் வரையில் தாமதமாக இயக்கப்பட்டன. ஆயினும் விமானங்கள் தாமதங்கள் குறித்தும், அதற்கு என்ன காரணம் எனவும் பயணிகளுக்கு கூறப்படவில்லை என்பதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்து,
“டெல்லியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானங்கள், டெல்லி வான்வெளியை கடந்து சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதமாக வந்ததால், சென்னை விமான நிலையத்தில் இதுபோன்ற தாமதங்கள், விமானங்கள் ரத்து போன்ற நிலை ஏற்பட்டன. இதுகுறித்து அந்தந்த விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தகவல்கள் தெரிவித்துள்ளன”
என்று தெரிவித்துள்ளனர்.