சென்னை: 
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 224 படுக்கைகளை கொண்ட கொரோனா சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கொரொனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது, இங்கு 224 படுக்கைகளுடன், 12 அனுபவமிக்க சித்த மருத்துவர்கள், முழுக்க முழுக்க சித்த மருந்துகளை கொடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள, அறிக்கையின்படி அங்கு 12 அனுபவம் மிக்க மருத்துவர்கள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், அவர்களுக்கு முழுக்க முழுக்க சித்த  மருந்துகளே கொடுக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், ஆடாதொடை மணப்பாகு, தனிசதீ சூரணம், பிரமானந்த பைரவம் போன்ற சித்த மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் சித்தா முறையில் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.
இந்த சித்த மருத்துவ மையத்தை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.  பின்னர் பேசிய அவர், இதுவரை சென்னையில் மட்டும் சித்த மருத்துவமனை முறையில் மொத்தம் 135 பேர் குணமடைந்து சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணன் பேசுகையில்,  கேரளாவில் சித்த மருத்துவ முறையை கடைபிடித்து கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதைப் போலவே, தற்போது தமிழ்நாட்டிலும் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு இன்னும் நல்ல சிகிச்சை அளிக்க முடியும், மிக விரைவாகவே அவர்களை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி இந்திய மருத்துவமான ஆயுர்வேதா, சித்தா, மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ ஆய்வுகளும், கொரோனாவிற்கான மருந்தை கண்டுபிடிக்க நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.