தூத்துக்குடி: வங்கால விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதில் உறுதியாக நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகள் தவறி வருகின்றன. மாநில முதல்வர் எப்போதும்போல கண்துடைப்புக்காக ஒரு கடிதம் எழுதுவதும், மத்தியஅரசு, இலங்கை அரசை வலியுறுத்துவதுமாக பல ஆண்டுகளாக நாடங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மீனவர்கள் கைது குறித்து தகவல் அறிந்த மீனவர்கள், கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.