லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனம்ழையால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக உத்தரபிரதேசத்தில் வெயில் வாட்டிய நிலையில் லக்னோ, பிரோசாபாத், சித்தார்த்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தன.
பிரோசாபாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் லலிதா தேவி (30 வயது) என்ற கர்ப்பிணிப் பெண்ணும், பதவ்வீர் சிங் (32 வயது) என்பவரும் பரிதாபமாக இறந்தனர்.
சித்தார்த்நகரில் வேலைக்கு சென்ற தொழிலாளி கன்ஷ்யாம் (40 வயது) மின்னல் தாக்கி உயிரிழந்தார். மோச்குர்த் கிராமத்தில் ஹரிஷ்சந்திரா (25 வயது) என்பவர் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கி இறந்தார். அதே நேரத்தில் சக்ரான் காவல் நிலையப்பகுதியில் உள்ள ரசூல்பூர் கிராமத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் குசுமா தேவி (55 வயது) என்பவர் உயிரிழந்தார். இது தவிர பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
இதேபோல கான்பூர், காஷிபூர், கோண்டா, அமேதி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு உயிர்ச்சேதங்கள் பதிவாகியுள்ளன. இரவு 11 மணி வரை மாநிலம் முழுவதும் 22 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ள பாதிப்புகள் அதிகம் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை விரைந்து எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பலியான 22 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார். மேலும் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முதல்var யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்