சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிப்பாக இஸ்லாமிய பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரம் தொடர்பாக 21 வயது இளைஞர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பல பெண்களின் படங்களை இழிவான கருத்துடன் பதிவிட்ட ‘புல்லி பாய்’ என்ற செயலி குறித்து பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஜனவரி 1 ம் தேதி டெல்லி போலீசில் புகாரளித்தார்.

‘புல்லி பாய்’ செயலியால் பாதிக்கப்பட்ட வேறு சிலரும் இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் புகாரளித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட டெல்லி சைபர் க்ரைம் போலீசார், இந்த செயலி தொடர்பாக ட்விட்டர் மற்றும் கிட்-ஹப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த 21 வயது மதிக்கத் தக்க வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.