இந்திய தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா $21 மில்லியன் செலவழித்தாக கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்ப் கூறியது தவறான தகவல் என்றும் அந்த நிதி வங்காளதேசத்திற்கு வழங்கப்பட்டது என்றும் அதற்கான சரியான ஆதாரங்கள் இருப்பதாகவும் இங்குள்ள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. தவிர, டிரம்புக்கு எதிராக வலதுசாரிகளும் வரிந்து கட்டினர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு $21 மில்லியன் வழங்கப்பட்டதாக தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிபர் டிரம்ப் இன்றும் தெரிவித்துள்ளார்.

யு.எஸ். எய்ட் (USAID) என்ற பெயரில் சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை டிரம்ப் நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பைடன் ஆட்சியில் இந்த நிதி எந்தெந்த நாடுகளுக்கு வழங்கப்பட்டது அவை எதற்காக செலவிடப்பட்டது என்பது குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது பேசிய டொனால்ட் டிரம்ப், “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவிற்கும் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கைக்காக 21 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நமக்கு ?” என்று கேள்வி எழுப்பிய அவர், “எனக்கும் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்” என்று கிண்டலாக கூறினார்.

தவிர, வங்கதேசத்தின் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்த USAID வழங்கிய 29 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் டிரம்ப் குறிப்பிட்டார். “வங்கதேசத்தில், யாரும் கேள்விப்படாத ஒரு நிறுவனத்திற்கு 29 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன, அந்த நிறுவனத்தில் இரண்டு பேர் மட்டுமே பணிபுரிந்தனர்” என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.

இந்தியாவில் வெளிநாட்டு நிதியை, ஆளும் பாஜக அரசு எதிர்த்து வரும் நிலையில் இந்திய தேர்தலுக்காக பணம் வழங்கப்பட்டதாக பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் தொடர்ந்து பேசிவரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி விரைவில் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.