சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவடைந்து கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைமைப் பொறுப்புக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
அதன்படி, மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், பேருராட்சி துணைத்தலைவருக்கான தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர் ,நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இதில் 20 மாநகராட்சி மேயர் பதவிகளில் திமுக போட்டியிடும் நிலையில், கும்பகோணம் மேயர் பதவி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கான தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி 21 மாநகராட்சிகளிலும் மேயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைமேயருக்கான தேர்தல் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன் தேர்வானார். அவருக்கு மாநகராட்சி ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ராமச்சந்திரனுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த பதவி ஏற்பு விழாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர் சரவணன் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்தார். மாநகராட்சியில் அவர் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகராட்சி ஆணையர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கும்பகோணம் மாநகராட்சி 17-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநரான க.சரவணன் (42), மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் இன்றுதனது சொந்த ஆட்டோவில் வந்து மேயர் பதவியை ஏற்றுக்கொண்டார். இன்று காலை ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணிந்தவாறு கும்பகோணம் காவேரி நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சூழ ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியில் இருந்த காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர்கள் மூவரும் என 45 பேர் கலந்து கொண்டனர்.
அதிமுகவின் மூன்று உறுப்பினர்களும் மேயர் தேர்தலுக்கான கூட்டத்துக்கு வரவில்லை.
இதையடுத்து, ஆணையர் செந்தில்முருகனிடம் மேயர் வேட்பாளரான சரவணன் தனது வேட்புமனுவை வழங்கினார். வேறு யாரும் மேயர் பதவிக்கு போட்டியிடாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் அறிவித்தார்.
பின்னர், மேயருக்கான இருக்கையில் அமரவைத்து, அவருக்கு வெள்ளியால் ஆன செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மேயர் சரவணன் தலைமையில் முதல் மாமன்றக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த மேயர் சரவணனை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் ஏராளமான திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
மாநகராட்சி மேயர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்:
- சென்னை மாநகராட்சி மேயராக பிரியாராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஆவடி மாநகராட்சி மேயராக உதயகுமார் ,
- தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரி,
- காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜ்,
- மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணியும்,
- திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன்,
- நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன்,
- சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா இன்பம் ,
- நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மகேஷ்,
- தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன்,
- தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக ராமநாதன் ,
- கரூர் மாநகராட்சி மேயராக கவிதா கணேசன்,
- ஓசூர் மாநகராட்சி மேயராக சத்யா,
- திண்டுக்கல் மாநகராட்சி மேயராக இளமதி,
- வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா அனந்தகுமார்,
- கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி,
- கோவை மாநகராட்சி மேயராக கல்பனா,
- சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன்,
- திருப்பூர் மாநகராட்சி மேயராக தினேஷ்குமார்,
- ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம்,
- கும்பகோணம் மாநகராட்சி மேயராக சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆட்டோ டிரைவர் சரவணன் போட்டி! கே.எஸ்.அழகிரி
சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் வாழ்த்து…