சென்னை: சென்னையில் இதுவரை 2,081 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், 1,290 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகால்வாயில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படையினரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில், 15 மண்டலங்களில் 624 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 1,457 தற்காலிக கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 2,081 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
இதேபோல், 1,290 மெட்ரிக்டன் அளவிலான கட்டிடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் வடிகால்களில் இருந்து 606 கழிவுநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,
பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் உள்ள கழிவுநீர் இணைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறான செயல்கள் மூலம் அபராதம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.