டெல்லி:
தேசிய கட்சிகள் கோலோச்சும் தலைநகர் டெல்லியில், மாநிலக்கட்சியான ஆம்ஆத்மி கட்சி 3வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில், ஆம்ஆத்மி தொண்டர்கள் 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என பதாதைகள் மூலம் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக ஆட்சியின் குடைச்சல்களை சமாளித்து, மக்கள் நலனின் அக்கறைக் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி, இளந்தலைமுறையினரிடம் அகோர வரவேற்பை பெற்றுள்ளவர் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
கடந்த 8ந்தேதி அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. ஆ இருந்தாலும், 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை முதலே ஆம்ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், தற்போதைய 12 மணி நிலவரப்படி, ஆம்ஆத்மி 57 இடங்களையும், பாஜக 13 இடங்களிலும் முன் னிலை பெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சி டோட்டலாக வாஷவுட் செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 50.74 சதவீதமும், பாஜக 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.
ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கட்சித் தொண்டர்கள் ஆரவாரமுடன் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து சாந்தினி சோக் தொகுதியில் போட்டியிட்ட அல்கா லம்பா பின்னிலையில் இருந்து வருகிறார். இதேபோன்று பாஜவுக்கு சென்று மாடல்வுடன் தொகுதியில் போட்டியிட்ட கபில் மிஸ்ரா பின்னிலையில் இருந்து வருகிறார்.
இந்திய வரலாற்றிலேயே எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாமல் அரசியல் கட்சியைத் தொடங்கியவர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகப் பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். இது தேசிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2013ல் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய ஆம்ஆத்மி கட்சி 28 இடங்களை பிடித்து 2வது இடத்தை கைப்பற்றியது. பாஜக ஆட்சி அமைத்தது.
பின்னர், 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 67ல் வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்தார். பாஜகவுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்து. இந்த நிலையில், தற்போது 3வது முறையாக மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். தனது கட்சியின் சின்னமான “துடைப்பத்தினைக் கொண்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகளை கூட்டிப்பெருக்கி குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.
மோடி, அமித்ஷா உள்பட பெரிய பெரிய அரசியல் ஜாம்பவான்கள் வசித்து வரும் டெல்லியில், அனைத்து தரப்பு அ அச்சுறுத்தல்களையும் மீறி, அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று சாதனை படைத்து வருகிறார் கெஜ்ரிவால், இதன் காரணமாக அவரை 2024ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் களமிறக்க ஆம்ஆத்மி தொண்டர்கள் விரும்புகின்றனர்.
இன்றைய வெற்றியை கொண்டாடும் ஆம்ஆத்மி தொண்டர்கள், 2024ம்ஆண்டு பொதுத்தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என குறிப்பிடும் வகையில் பதாதைகளை பிடித்து உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் நாள்தோறும் வகை வகையான பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும், சட்ட மன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சியின் வளர்ச்சி தேசிய கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது…. ஆம்ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அபரிதமான வளர்ச்சி அடுத்த லோக் சபா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது…