சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.2200 குறைந்த நிலையில், இன்று சரவனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று மத்தியஅரசு தாக்கல் செய்த 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். அதன்படி, இதவரை வசூலிக்கப்பட்டு வந்த 15 சதவீத வரியானது, 6 சதவீதமாக குறைக்கப்பட்டுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
நேற்று மாலையே தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை மேலும், குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920-க்கும், ஒரு கிராம் ரூ6,490-க்கும் விற்பனையாகிறது.
அதுபோல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் 92 ரூபாய்க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து பார் வெள்ளி ரூ.92ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.