ஸ்டாக்ஹோம்: 2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு அமெரிக்கா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 3விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது.
உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் அறிவிக்கப்படுகிறது. மற்ற விருதுகள், சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று 2021ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியை சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
புவிவெப்பமயமாதலை நம்பகத்தன்மை உள்ள வகையில் கண்டறியும் முறைக்காக மனாபே, ஹாசில்மேன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சிக்கலான இயற்பியல் கட்டமைப்புகள் குறித்த விளக்கத்திற்காக ஜியார்ஜியோ பாரிசிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நோபல் விருதுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்படும்.