சென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு  மற்றும் தளர்வு, கொரோனா பரவல்  நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். அப்போது,  தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் டிசம்பர் 15–க்குள் திறக்கப்படும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இதுவரை ரூ.7,526 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பொதுமுடக்கம் அமலில் உள்ளது.  இதற்கிடையில்  தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியதாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம்  பாதிக்கப்பட்டதாலும், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்கத்தில் சுமார் 90 சதவிகித தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டதால், தற்போது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை திரும்பி உள்ளது.

இதுவரை,  பள்ளி- கல்லூரிகள் திறக்க தடை தொடர்கிறது. மேலும், மெரினா கடற்கரை உள்பட பொழுது போக்கு பூங்காக்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. 100 பேர்களுக்கு மேல் கூடும் அரசியல் மற்றும் நிகழ்வுகளுக்கு  அனுமதி இல்லை. தற்போதைய பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் வரும் 30ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து, ஊரடங்கை தொடர்வது, மேலும் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நிவர் புயல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வழங்கப்பட்டது. தலைமை செயலாளர் மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்பு கொண்டு அரசு வழிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தினார்.

இந்த புயல் மழையால் பெருமளவு பொருட்சேதம், பெருமளவு உயிர்சேதம் இல்லை. சிறப்பான முறையில் நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலிலேயே சரியான முறையில் நடவடிக்கை எடுத்த காரணத்தினால் எந்தவித சேதமும் இல்லாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். தாழ்வான பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். உணவு மற்றும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை நானும் துணை முதலமைச்சரும் நேரில் சென்று பார்த்தோம். மாவட்ட அமைச்சர்கள் நேரடியாக சென்று உதவி செய்தார்கள். வருவாய்துறை அமைச்சர் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் தங்கி நிலவரம் குறித்து ஆலோசித்து மக்களுக்கு எடுத்து சொல்லி அறிவுரைகளை வழங்கினார்.

தமிழகத்தில் புயலின் தாக்கம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார். மத்திய குழுவையும் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதன்படி மத்திய குழுவை அனுப்பி வைத்தார்கள்.

என்னுடன் இரவு 9 மணி அளவில் பிரதமர் தொடர்பு கொண்டு நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் நல்ல செய்தியை வழங்கினார். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என பிரதமரும், அமித்ஷாவும் தெரிவித்தது மகிழ்ச்சி தருகிறது. இந்த புயல் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. அதிக தண்ணீர் வரத்துக் காரணமாக பாலாறு, மகாநதி உட்பட பல்வேறு ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. அதையும் மாவட்ட கலெக்டர்கள் சரியாக கண்காணித்து நடவடிக்கைகளை எடுத்தார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையை பொறுத்தவரை தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன. முழுவீச்சில் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் அதிகஅளவில் தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள். அடிக்கடி இதுபோன்று நிகழ்வதால் இதற்கு நிரந்தர தீர்வு காண திட்டம் வகுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். கனமழை காரணமாக மேலே குறிப்பிட்ட பகுதி மக்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும்.

தேங்கிய நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எந்தெந்த மாவட்டங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததோ அவற்றை எல்லாம் அகற்ற அந்தந்த பகுதிகளில் அதிகாரிகள் தலைமையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

மழை வெள்ளம் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. எவ்வளவு பயிர் சேதம் அடைந்து இருக்கிறது என முறையான கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். மேலும் பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் உரிய தொகை பெற்றுத் தரப்படும். புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உயிரிழந்த கால்நடைகளுக்கும் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அந்த தொகை வழங்கப்படும்.

தமிழகம் இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் மாநிலமாக தொடர்ந்து 3 வது ஆண்டாக இந்தியா டுடே பத்திரிக்கை தேர்வு செய்திருக்கிறது. பல்வேறு ஆய்வுகளை நடத்தி இந்த விருதை நமக்கு வழங்குகிறார்கள். பெரிய மாநிலங்களில் உள்ள வளர்ச்சி மற்றும் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெற பாடுபட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அரசு பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது ஒட்டுமொத்த முயற்சியால் தான் இந்த விருது கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்புப் பணி குறித்தும், அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்கு எனது தலைமையில், 12 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டங்கள் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றன. அதேபோல, 10 முறை மருத்துவ வல்லுநர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தலைமைச் செயலாளர் தலைமையில், 13 முறை மாவட்ட கலெக்டர்களுடைய ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்ற ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து, மாவட்ட நிர்வாகமும் அதனை பின்பற்றியதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதேபோல, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களை அரசு கவனமாக பரிசீலித்து, தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கம் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தப்பட்டது.

கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அம்மாவின் அரசால் தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அரசு செலவு ரூபாய் 7,525.71 கோடியாகும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் கபசுரக் குடிநீர், இரண்டு வேளைகளிலும் கிருமி நாசினி தெளிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்பாட்டிற்குள் உள்ளது. வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி இரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற பாதிப்புள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய்த் தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று அவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து குணமடையச் செய்ததன் வாயிலாக நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது.

5 லட்சத்து 23 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள்

இதுவரை 5,22,530 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 2,79,36,147 நபர்கள் கலந்துகொண்டு பயனடைந்திருக்கிறார்கள். இதில் 11,46,363 நபர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு, காய்ச்சல் முகாம்கள் நடத்தியதன் விளைவாக வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிய முடிந்தது. அத்துடன், விளம்பரத் தாள்கள் மூலம் இரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற நோயால் உள்ளவர்களுக்கான தேவையான அறிவுரைகளை வழங்கி, அதனை வீடு, வீடாகக் கொண்டு சேர்க்கப்பட்டதன் விளைவாகவும் இந்நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய மருத்துவம் சார்ந்த செலவினம் 1,983 கோடி ரூபாயும், நிவாரணம் சார்ந்த செலவினம் 5,389 கோடி ரூபாயும் ஆகும். அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தியும், வீடு வீடாகச் சென்றும், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்தும், ஆர்டி பிசிஆர் சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவை தொடர்ந்து நடைபெற்ற காரணத்தினால் இன்றைக்கு நோய்ப்பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தில் 220 ஆய்வகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் 67 அரசு ஆய்வகங்களும், 153 தனியார் ஆய்வகங்களும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு, இந்நோயைக் கண்டறிய இந்தியாவிலேயே அதிகளவில் ஆய்வகங்களை ஏற்படுத்தியதும் அம்மாவின் அரசுதான். இதுவரை ஆர்டி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1.18 கோடி. தற்போது நாளொன்றுக்கு சுமார் 70,000 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 95,000 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்துள்ளோம். இவ்வாறு, அதிகளவில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதன் விளைவாக நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்தளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. மொத்த பரிசோதனையில் 76 விழுக்காடு அரசு பரிசோதனை நிலையங்களில் செய்யப்பட்டன. பிற மாநிலங்களில் பரிசோதனை குறைந்தபோதும், தமிழ்நாடு அரசு அந்தப் பரிசோதனைகளை குறைக்காமல் இதுவரை தொடர்ந்து முழுமூச்சுடன் செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் வீடு, வீடாகச் சென்று மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் அரசு பார்த்துக் கொண்டது.

மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,41,527 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 34,714 படுக்கைகளும் ஐசியூ வசதி கொண்ட 7,697 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவப் பணியாளர்கள் எனக் கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் உயரிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. கோவிட் நோய்க்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க கூடுதலாக மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப் 400 எம்ஜி, ரெம்டெஸ்விர் 100 எம்ஜி, இனாக்சபெரின் 40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், என் 95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் (பிபிஇ கிட்ஸ்), மும்முடி முகக்கவசங்கள், சிடி ஸ்கேன், எக்ஸ் ரே இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் தொடர்ந்து கொள்முதல் செய்து நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நோய் மேலாண்மைக்காக அலோபதி மருத்துவத்துடன்- இந்திய முறை மருத்துவ (ஆயுஷ்) சிகிச்சை – நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகம்.

தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 மினி கிளினிக் துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருநகர சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள், கூடுதலாக களப் பணியாளர்கள் நியமித்தல், காய்ச்சல் சிறப்பு முகாம்கள், ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் வழங்குதல், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனிமைப்படுத்தும் வசதி இல்லாது இருந்தால், அவர்களுக்கு அவ்வசதியை அரசு மையங்களில் ஏற்படுத்தி, 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்குதல், தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்டன. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, திருமழிசைக்கு மாற்றப்பட்டு, இந்நோய்ப் பரவல் படிப்படியாகக் குறைந்தவுடன் மீண்டும் கோயம்பேட்டிலேயே செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

பிரதமர், காணொலிக் காட்சி மூலமாக தமிழகத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கேட்டறிந்தார். உடன், பிரதமர் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த முறையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது என்று பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்ற செய்தியையும் தெரிவித்தார். அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் முழு ஒத்துழைப்பு தேவை

பண்டிகை காலங்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பொதுமக்கள் தவறாமல் முகக் கவசம் அணிதல், மற்றும் அரசு அறிவித்த அறிவிப்புகளை பின்பற்றாதவர்கள் மீது அபராத விதிப்பு போன்ற நடவடிக்கைகளாலும் இந்நோய்த் தொற்றுப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும்பொழுது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். ஏனென்றால், இவற்றை பல்வேறு மாநிலங்களில் சரிவர கடைபிடிக்காத காரணத்தால் நோய்ப் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததன் மூலமும், அம்மாவின் அரசு அறிவித்த அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் சரியாக கடைபிடித்ததன் மூலமும், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கியதன் மூலமாகவும் இந்நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் குறைந்து இயல்பு நிலை திரும்புவதற்கு அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்போடு மீண்டும், மீண்டும் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் நோய்ப் பரவல் முழுவதும் தடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

நோய்த் தொற்று நிலையைப் பொறுத்தவரை, அம்மா அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்று குறைக்கப்பட்டிருந்தாலும், இயல்பு நிலை திரும்புவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 7,77,616 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 7,54,826 நபர்கள், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 11,109 நபர்கள், இறப்பு விகிதம் 1.5% அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அம்மாவின் அரசால் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கப்பட்டதால், பொதுமக்கள் அந்தச் சிரமத்திலிருந்து மீட்கப்பட்டார்கள். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள், 14 நல வாரிய தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் என 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2000 ரூபாயும். மேலும், 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 ரூபாயும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே. திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.