பெய்ஜிங்: உலகின் முதல் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், 200 மில்லியனுக்கும்(20 கோடி) அதிகமான மக்களின் ஒரு நாள் வருமானம் 5 அமெரிக்க டாலர்களுக்கும் (தோராயமாக ரூ.350) குறைவு என்று ஐ.நா. சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், சீனாவின் வறுமைக்கோட்டு மதிப்பீட்டு அளவு 1.90 அமெரிக்க டாலர் என்பதாக இருப்பதால், அதன்மூலம் நாட்டிலுள்ள ஏழைகளின் கணக்கை சரியாக மதிப்பீடு செய்ய முடிவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த 200 மில்லியன் பேரில், பெரும்பான்மையோர் சீனாவின் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வறுமை என்பதற்கு சீன அரசு நிர்ணயித்துள்ள வருமான அளவீடும், மிக மோசமான வறுமை என்பதற்கு உலக வங்கி நிர்ணயித்துள்ள வருமான அளவீடும் சமமானதே.

மிக மோசமான வறுமை என்பதைக் குறிக்க ஒருநாள் வருமானத்தை 1.90 அமெரிக்க டாலராகவும், குறைந்தளவு மற்றும் மேல்நடுத்தர வறுமை என்பதைக் குறிக்க முறையே ஒருநாள் வருமானத்தை 3.20 அமெரிக்க டாலர் மற்றும் 5.50 அமெரிக்க டாலர் என்பதாகவும் வரையறை செய்துள்ளது உலக வங்கி.