மிர்தசரஸ்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து 200 இந்துக் குடும்பங்கள் பஞ்சாப் மாநிலத்துக்குள் நடந்தே வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் படி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.   இதையொட்டி நடைபெறும் போராட்டங்களால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதை அதிகரிப்பது போல் மற்றொரு செய்தி வெளியாகி உள்ளது.   இந்திய பாகிஸ்தான் எல்லையான அட்டாரி வழியாக சுமார் 200க்கும் அதிகமான இந்துக் குடும்பங்கள் பஞ்சாப் மாநிலத்திற்குள் நடந்தே வந்துள்ளனர்.  இவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து டிசம்பர் மத்தியில் இருந்து பயண விசா மூலம் வந்துள்ளனர்.  இந்த விசா எல்லையோரம் உள்ள உறவினர்களைப் பார்க்க அளிக்கப்படுவதாகும்.

இவர்கள் அனைவரும் நடந்தே வந்த போதும் ஏராளமான பொருட்களைக் கட்டி எடுத்து வந்துள்ளனர்.  இதைப் பார்க்கும் போது அவர்கள் அங்குள்ள தங்கள் இல்லங்களைக் காலி செய்து இங்கு வந்துள்ளதாகத் தோன்றுவதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும் இவர்கள் வெளி ஆட்கள் யாருடனும் எதுவும் பேசுவதில்லை.

பாதுகாப்பு அதிகாரிகள் இந்த இந்தியக் குடும்பங்கள் இங்குக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என சந்தேகிக்கின்றனர்  மேலும் தற்போது அவர்கள் பயண விசா பெற்று வந்துள்ளதாகவும் அவர்கள் விசாக் காலம் முடிந்தும் இங்குத் தங்கினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.