சென்னை: தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் 20% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது.
இந்த மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் உடனடியாக அதற்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந் நிலையில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விவரம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.