கடலூர்:
டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை உலுக்கி எடுத்துவரும் இந்த டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டும் வேகமாக பரவி வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதன் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
வீடு, பள்ளி, தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் தேங்கி கிடக்கும் மழை நீரில் இருந்து உருவாகும் இந்த வகை கொசுக்களினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சலில் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் இறந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழு அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனையும், முகாம்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.