கைலாசா நாட்டைச் சேர்ந்த 20 பேரை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகளை கடத்துதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் போலி சாமியார் நித்யானந்தா 2019 ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
அதேவேளையில், “பிரபஞ்ச அரசியலமைப்பு” சட்டத்துடன் கைலாசா என்ற பெயரில் உலகின் முதல் இந்துக்களுக்கான “இறையாண்மை கொண்ட தேசத்தை” உருவாக்கியுள்ளதாக அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காணொளி வாயிலாக செய்தி வெளியிட்டிருந்தார்.
கைலாசா நாட்டில் சொக்கத் தங்கத்தாலான பணம் பயன்படுத்தப்படுவதாகவும் அதனை ரிசர்வ் வங்கி போன்ற வங்கி நிர்வகிப்பதாகவும் அந்நாட்டிற்கென தனி பாஸ்போர்ட் இருப்பதாகவும் நித்தியானந்தா அளந்து விட்ட அளப்பிற்கு அளவே இல்லை.
தவிர, 2023ம் ஆண்டு அவரது நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு சிலர் ஐ.நா. சபையிலும் வலம்வந்தனர்.
இந்த நிலையில், பொலிவியா நாட்டில் அமேசான் காடுகளை ஒட்டி வசிக்கும் பௌரின் என்ற இனக்குழுவுடன் தொடர்பில் இருந்த கைலாசா நாட்டைச் சேர்ந்தவர்கள் 2024ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் இருந்து அவர்களை மீட்க உதவிகரமாக இருந்துள்ளனர்.
இதனால் அந்த இனக்குழுவுடன் நெருக்கம் அதிகமானதை அடுத்து அந்தப் பகுதியில் சுமார் 4.8 லட்சம் ஹெக்டேர் அளவு, அதாவது இந்திய தலைநகர் புதுடெல்லியை விட மூன்று மடங்கு அதிக பரப்பளவு கொண்ட இடத்தை தங்கள் நாட்டின் பெயரில் குத்தகைக்கு வாங்கியுள்ளனர்.
அதற்காக அந்தப் பகுதியில் உள்ள பாயர், கயூபா மற்றும் எஸ்ஸே எஹா ஆகிய மூன்று இனக்குழுக்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பாயர் இனக்குழுவிடம் இருந்து ஆண்டுக்கு 2,00,000 அமெரிக்க டாலர் என்று 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்த இவர்கள், மற்ற குழுக்களிடம் ஆண்டுக்கு $1,08,000 என்று 1,000 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
பொலிவிய நாட்டு பூர்வீக இனக்குழுக்களின் அனுபோகத்தில் இருந்துவந்த அரசுக்கு சொந்தமான இந்த அரசு நிலத்தை கையகப்படுத்திய கைலாசா நாட்டைச் சேர்ந்தவர்கள் 2025 ஜனவரி மாதம் முதல் அங்கு பல்வேறு செயல்திட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
தவிர, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிக்குள் பூர்வகுடி மக்கள் நுழைவதை தடுத்தும் வந்துள்ளனர்.
இதுகுறித்து பொலிவிய அரசுக்கு கிடைத்த தகவலை அடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியா, அமெரிக்கா, சீனா, மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களை கைலாசா நாட்டவர்கள் என்று கூறிக்கொண்டு அங்குள்ள இனக்குழுக்களை ஏய்த்துவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 20 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை அவரவர் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பொலிவிய வெளியுறவுத்துறை கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.