புதுடெல்லி: பாகிஸ்தானில் அமைந்த கர்தார்பூர் சாஹிப்புக்கு வரும் இந்திய யாத்ரிகர்களிடம் தலா 20 டாலர் நுழைவுக் கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் நினைவிடம். இந்தியாவிலிருந்து சீக்கிய யாத்ரிகர்கள் இந்த புனித ஸ்தலத்திற்கு விசா இல்லாமல் எளிதாக சென்றுவரும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும், இதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளிலிருந்து கர்தார்பூர் சாஹிப்புக்கு சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 5000 சீக்கிய யாத்ரிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது ஒரு புதிய சிக்கலாக, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையும் சீக்கிய யாத்ரிகர்களிடம் தலா 20 டாலர் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கு பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த முடிவுக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகவும், அதனையடுத்து பாகிஸ்தான் அனுப்பிய வரைவுத் திட்ட அறிக்கைக்கும் இந்தியா தரப்பில் பதில் அளிக்கப்படாமல் உள்ளதாகவும் தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.