அமைச்சருக்கு கொரோனா..  2 மாநில முதல்வர்கள் பீதி..

மத்தியப்பிரதேச மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் அரவிந்த் சிங், கொரோனாவால் பாதிக்கப்பட்டு போபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பா.ஜ.க. தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

பீதிக்குக் காரணம் என்ன?

அண்மையில் மரணம் அடைந்த மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டனின் இறுதிச் சடங்கு கடந்த செவ்வாய்க் கிழமை லக்னோவில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் அரவிந்த் சிங் கலந்து கொண்டு ஆளுநருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த இறுதிச் சடங்கில், அமைச்சர் அரவிந்த்துடன் ,  ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், ம.பி. முதல்வர் சவுகான், உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத், உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டன.

மறுநாள் ( புதன்கிழமை) போபாலில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்திலும் அரவிந்த் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில மணி நேரத்தில் அவருக்குத் தொண்டை வலி ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்தார்.

அன்று இரவு  கிடைத்த பரிசோதனை ரிசல்ட்டில் அமைச்சருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால், ஆளுநர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த படி அரவிந்த் வெளியிட்டுள்ள வீடியோ வடிவிலான அறிக்கையில்  தன்னுடன் தொடர்பில் இருந்தோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-பா.பாரதி.