திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக, கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் தமிழக காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் ஐஜி விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை  13 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் திருவண்ணாமலையில் ஒரே இரவில், அடுத்தடுத்து  4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு 75 லட்ச ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையையும், மாநில திமுக அரசையும் கடுமையாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தமிழகஅரசுக்கு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைடுத்து, கொள்ளையர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளைக்கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களையும் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு வடமாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும்,  பல மாநிலங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இறுதியில் கொள்ளையர்களின் தொலைபேசி உரையாடல்களை கொண்டு அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் என்பவரை விசாரணை செய்தனர். மேலும், குஜராத்தை சேர்ந்த 6 பேரிடமும் இந்த விசாரணை நடைபெற்றது. இதையடுத்து ஆரிப்பை கைது செய்த காவல்துறையினர், ஆசாத் என்பரையும் கைது செய்து, திருவண்ணாமலை அழைத்து வரப்பட்டனர்.

ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஆரிஃப்  மற்றும் ஆசாத் ஆகிய இருவரிடமும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், திருவண்ணா மலை எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த காவல்துறை ஐஜி கண்ணன்.   திருவண்ணாமலை ஏடிஎம் கொள்லையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் கோலார் பகுதியில் தங்கியிருந்து, திருவண்ணாமலையை நோட்டமிட்டு வந்துள்ள னர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்டு உள்ள  ஆறு பேரை குஜராத் மாநில போலீசார் நிறுத்தி உள்ளனர். அவர்களிடம் விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது என்றவர், கொள்ளை சம்பவம் தொடர்பாக,  மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் தெளிவாக கிடைத்துள்ளது, அதனால் இந்த வழக்கு  முடிவடைந்து விட்டது என்றும் ஐஜி தெரிவித்தார்.