ஆனைமலை: ஆலைமலை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 69ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயவேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதில்,  ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது. இந்த நிலையில்,  ஆனைமலை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது காவல்துறையின் நடவடிக்கையை கேள்விக்குறியாகி உள்ளது.

ஆனைமலையை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள்.  இவர்கள் அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் மதுவை வாங்கி குடித்தள்ளனர். இதனால் அவர்களுக்கு  வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்ததால்தான் இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வால்பாறை டிஎஸ்பி-யான ஸ்ரீநிதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் மஞ்சநாயக்கனூர் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, “ரவிச்சந்திரனுக்கு ரத்த அழுத்த பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். மகேந்திரனுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக மது அருந்தவில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால், அந்த பகுதி மக்கள் அங்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது., அதைத்தான் அவர்கள் குடித்துள்ளார்கள்  என்று கூறி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: மாநிலம் முழுவதும் கடந்த இரு நாளில் 876 சாராய வியாபாரிகள் கைது