மதுரை:

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை மகன் ஆகியோர்  சாத்தான்குளம் காவல்துறையினரால் சரமாரியாக அடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழக தென்மாவட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தானாகவே வழக்குபதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி. மதியம் 12.30 மணிக்கு காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில்  ஆஜராக உத்தரவிட்டுஉள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர், ஊரடங்கை மீறியதாக  சாத்தான்குளம் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. தென் மாவட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 2 எஸ்ஐகளை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும், நாளை தமிழகம் முழுவதும் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
காவல்துறையினரின் இந்த கொடூர சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறைத்துறை ஏடிஜிபி சம்பவம் தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து, இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,  வழக்கினை மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைத்து தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி காணொளி காட்சி மூலம் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.