நாசிக்
மகாராஷ்டிரா மாநில இரு முக்கிய பாஜக தலைவர்கள் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா முன்பு கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது. இந்த வருடம் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதல்வர் பதவி இழுபறியில் கூட்டணிக் கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்த சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது.
தற்போது ஆட்சியில் உள்ள சிவசேனா கட்சியில் பல முக்கிய பாஜக தலைவர்கள் இணைந்து வருகின்றனர். 2017 ஆம் வருடம் நடந்த நாசிக் நகராட்சி தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 122 இடங்களில் 66 இடங்களைப் பெற்றது. அப்போது கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சிக்கு 35 இடங்களில் வெற்றி கிடைத்தது. வரும் 2022 ஆம் ஆண்டு இங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இப்பகுதியின் 2 முக்கிய பாஜக தலைவர்களான வசந்த் கீதே மற்றும் சுனில் பாகுல் ஆகிய இருவரும் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் வரும் 2022 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் தாய் வீடு வந்த சிவசேனா போராளிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.