வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் புதன்கிழமை மாலை அங்குள்ள யூத அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில் “சுதந்திரம், சுதந்திரம் பாலஸ்தீனம்” என்று அவர் கத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் ஆகிய இரண்டு இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிகாகோவைச் சேர்ந்த 31 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என அடையாளம் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு அருங்காட்சியகத்திற்கு வெளியே சுற்றித்திரிந்த அந்த நபர் யூத அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்விலிருந்து வெளியேறிய நான்கு பேர் கொண்ட குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அருங்காட்சியகத்திற்குள் நுழைய முற்பட்ட அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

இஸ்ரேல் தூதரகம் அருகே நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து இஸ்ரேல் தூதரகங்கள் முன் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.