சென்னை:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 2 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல, தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னை அமைந்தகரை ரெயில்வே காலனி பகுதியில் வசித்து வரும் ஆண் மருத்துவர், கொளத்தூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். மேலும், கீழ்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகுதி நேர மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 5-ம் தேதி முதல் பணிக்கு வராத நிலையில் கடந்த 9-ம் தேதி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதியாக உள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 100 பேருக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியர்கள், நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், மருத்துவமனையை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று ஒரே நாளில் 2 மருத்துவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.