சிங்ரவுலி, மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் அனல் மின் திட்டச் சாம்பல் குளம் உடைந்து சாம்பல் வெளியேறி இருவர் மரணம் அடைந்து பல ஏக்கர் விளைநிலங்கள் பாழாகி உள்ளது
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனல் மின் ஆலை அமைந்துள்ளது. அனல் மின் ஆலையில் இருந்து வெளியாகும் உலைச் சாம்பல் ஒரு பெரிய குளம் அமைத்துச் சேமிப்பது வழக்கமாகும். இது மிகவும் கனமானது என்பதால் இதை கவனத்துடன் சேமிக்க வேண்டும்.
இந்த ஆலை சாம்பல் குளம் சுற்றுச் சுவர் பழுதடைந்து இருந்துள்ளது. இதனால் இது இடிந்து விழுந்து அருகில் உள்ள மக்களின் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் சாம்பலால் பாழாகும் என அருகில் உள்ள மக்கள் மூன்று மாதம் முன்பு ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அதன் பிறகு அது உடையாது என நிர்வாகம் உத்திரவாதம் அளித்துச் சரி பார்த்துள்ளது.
நேற்று இந்த சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து குளம் உடைந்துள்ளது. அதில் தேக்கி வைக்கப்பட்டிருந்த உலைச்சாம்பல் அருகில் உள்ள நிலங்களில் பரவி விளை நிலங்களைப் பாழ் படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இருவர் இந்த சாம்பல் குழம்பில் சிக்கி மரணம் அடைந்துள்ளதாகவும் நால்வரைக் காணவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சிங்ரவுலி மாவட்ட ஆட்சியர் சவுத்ரி, “இந்த உடைப்பு ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ளது. கிராமங்கள் எதுவும் நேரடியாக பாதிக்கப்படவில்லை. இதில் இருந்து வெளி வரும் சாம்பல் குழம்பு அணைக்கட்டுக்குச் செல்ல கால்வாய் உள்ளது.
குளம் உடைப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருவர் சடலம் கிடைத்துள்ளது. காணாமல் போனவர்களை வாரணாசியில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். “ என தெரிவித்துள்ளார்.