திருவனந்தபுரம்

கொரோனா பாதிப்பால் கேரளாவில் இருவர் உயிரிழந்து 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இங்கு கடந்த 2 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 59 வயது ஆண் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,141 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த 2 நபர்களுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாகவும் கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுவது கேரள சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு பணிகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றும், கொரோனா பரவல் தீவிரமடையவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.