சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்காவைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தன.

சிக்கன் பக்கோடா முதல் ஜீஸ் கடை வரை பல்வேறு உணவுவகைகளை விற்றுவரும் இந்த கடைகள் பல ஆண்டுகளாக இதே பகுதியில் மாமூலாக இயங்கி வருகிறது.

இதில் சிலர் தலைமுறைகளாக சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இங்குள்ள கடைகளை அகற்றி மாநகராட்சி வண்டியில் ஏற்றிச் சென்றனர்.

சுகாதாரமற்ற இடத்தில் உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வந்ததாக சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

வியாபாரம் முடிந்து கழிவுகளை அங்கேயே கொட்டிச் செல்வதால் நடைபாதையில் யாரும் நடக்கமுடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிச் சென்றனர், இருந்தபோதும் இரண்டே நாளில் நேற்று முதல் அங்கு தங்கள் வியாபாரத்தை மாமூலாக தொடங்கியுள்ளனர்.

சாலையோர வியாபாரத்திற்கு என்று சென்னை மாநகராட்சி ஒதுக்கியுள்ள இடங்கள் போதாது என்றும் அதிக கடைகளை வைக்கும் வகையில் அதிக பகுதிகளில் இடம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

https://x.com/omjasvinMD/status/1823183819534647696

மாநகராட்சி சார்பில் பாண்டி பஜாரில் வணிக வளாகம் அமைத்து சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கிய நிலையில் பல குடும்பங்கள் தி.நகரின் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பனகல் பார்க், சோமசுந்தரம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிரந்தரமாக நடைபாதையை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் புற்றீசல் போல் முளைத்துள்ள இந்த சாலையோர கடைகளை அகற்ற அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்த போதிலும் இது நிறைவேறுவதாகத் தெரியவில்லை என்று புலம்புகின்றனர்.

தி. நகர் தவிர அண்ணா நகர், ஐ.சி.எப்., வில்லிவாக்கம், பெசன்ட் நகர் என மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோர இரவு நேர சிற்றுண்டி கடைகள் அதிகரித்துள்ளது என்றும் இதனை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளோ மாநகராட்சி சுகாதார அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை என்றும் சென்னை மாநகராட்சியில் தொடர் களையெடுப்புகளை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு விடிவுகாலம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.