அகர்தலா: திரிபுராவில் பிறந்து 2 நாளே ஆன பச்சிளங் குழந்தை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதான் மிகக்குறைந்த வயதுடைய குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை, 1, 804,702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38,161 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்த கொரோனா வைரஸால், 52,783 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 758 பேர் உயிரிழந்துள்ளனர்.
திரிபுரா மாநிலத்தில் இதுவரை 5,251 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 3,463 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் பலியாக உள்ளனர். மேலும் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில், அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரியில் (ஏஜிஎம்சி) கடந்த வியாழக்கிழமை பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. சிசேரியன் மூலமே அந்த குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையிலும், அந்த பச்சிளங்குழந்தைக்கும் கொரோனா உறுதியானது.
இதையடுத்து, குழந்தை பிறந்த 2 நாளில், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக, மாநில சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்த்துள்ளார்.
மாநிலத்திலேயே குறைந்த வயதில் (பிறந்து 2 நாளில்) கொரோனாவால் இறந்த குழந்தை இது என்றும் மாநில அரசு தெரிவித்து உள்ளது.