மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, இரண்டு சீன நாட்டவர்கள் ஒரு தீங்கு விளைவிக்கும் பூஞ்சை வழியாக அமெரிக்காவிற்குள் “சாத்தியமான வேளாண் பயங்கரவாத ஆயுதத்தை” கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சீன குடிமக்களான யுன்கிங் ஜியான் (33), மற்றும் ஜுன்யோங் லியு (34) ஆகிய இருவரும் மீது சதித்திட்டம் தீட்டுதல், அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், தவறான அறிக்கைகள் மற்றும் விசா மோசடி ஆகிய குற்றவியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜியான் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது காதலன் லியு ஒரு சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

இந்த விசாரணை FBI மற்றும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

இந்த இரண்டு வெளிநாட்டினர் மீதும் அமெரிக்காவின் மையப்பகுதிக்குள் ‘சாத்தியமான வேளாண் பயங்கரவாத ஆயுதம்’ என்று விவரிக்கப்படும் ஒரு பூஞ்சையை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “தங்கள் திட்டத்தை மேலும் மேம்படுத்த மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.” என்று அமெரிக்க வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

ஃபுசாரியம் கிராமினேரம் என்ற பூஞ்சையை இவர்கள் கடத்தினர், இது மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகளை ஏற்படுத்தும். இந்தப் பூஞ்சை கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசியில் ஒரு நோயை ஏற்படுத்துகிறது. இது “சாத்தியமான வேளாண் பயங்கரவாத ஆயுதம்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது.

ஜியானின் மின்னணு சாதனங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் உறுப்பினராக இருப்பதையும், அதற்கு விசுவாசமாக இருப்பதையும் விவரிக்கும் தகவல்கள் இருப்பதாகவும் புகார் கூறுகிறது. ஜியானின் காதலன் லியு, சீனப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார் என்றும், அதே நோய்க்கிருமி குறித்து ஆராய்ச்சி நடத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளது.

முதலில் பொய் சொன்னதாகவும், பின்னர் ஜியான் பணிபுரிந்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக டெட்ராய்ட் பெருநகர விமான நிலையம் வழியாக ஃபுசேரியம் கிராமினேரம் கடத்தியதாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.